top of page

சென்னை :விமான சகாசம் ! உயிரழப்பு ! உயர்மட்ட விசாரணை தேவை ! தொல்.திருமா ! ஆதவ் அர்ஜுன்- நடிகர் விஜய்யும் குற்றசாட்டு !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

சென்னை விமான சாகசம். பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழப்பு , உயர்மட்ட விசாரணை தேவை, வி.சி.க., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.


இது குறித்து தொல்.திருமா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது


இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் 'விமானப்படை நாளைக்' கடைபிடித்து வருகிறது. தலைநகர் டில்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகத்தில் மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது.


இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழக அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் தான், ஐந்து பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது.


சென்னை நெரிசல் சம்பவத்துக்கு அரசின் கவனக்குறைவே காரணம்.!


இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. தமிழக அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.


விசாரணை

எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன்.


அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது' என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.!


இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது


மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.


கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்.


அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.


பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.


அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.


இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர்.


தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடுக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.வெ.க.தலைவர் நடிகர் விஜய்.


இதுகுறித்து சமூகவலைதளத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ' மெரினாவில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. அங்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.


மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


. உறியடி செய்திக்குழுவினர்



107 views0 comments

コメント


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page